இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி, நடப்பு எண்ணெய் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 3 சதவீதம் அதிகரித்து 151.64 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு , ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை இறக்குமதி செலவுகளை மேலும் அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு அக்டோபர் வரை எண்ணெய் ஆண்டாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு எண்ணெய் ஆண்டு 2025 நவம்பரில் தொடங்கி இந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைகிறது.எண்ணெய் இறக்குமதி தொடர்பாக இந்திய எண்ணெய் பிரித்தெடுப்பாளர்கள் சங்கம் (SEA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
2025 நவம்பர் முதல் 2026 செப்டம்பர் வரையிலான 11 மாதங்களில், சமையல் எண்ணெய் இறக்குமதி 3 சதவீதம் உயர்ந்து 151.64 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய எண்ணெய் ஆண்டின் இதே காலத்தில் இது 146.83 லட்சம் டன்னாக இருந்தது. சமையல் எண்ணெய் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படாத பிற தாவர எண்ணெய்கள் உள்ளிட்ட மொத்த இறக்குமதி 150.31 லட்சம் டன்னிலிருந்து 154.64 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இறக்குமதியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றமாக, கச்சா சமையல் எண்ணெயின் பங்கு 88 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி 16.89 லட்சம் டன்னிலிருந்து 7.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் பங்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இதற்கு மாறாக, கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி 129.94 லட்சம் டன்னிலிருந்து 144.24 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தோனேஷியா மற்றும் மலேஷியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய்க்குப் பதிலாக, கச்சா பாமாயில் இறக்குமதி அதிகரித்துள்ளது.
பாமாயில் இறக்குமதி 69.80 லட்சம் டன்னிலிருந்து 73.52 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சோயாபீன், சூரியகாந்தி, கடுகு எண்ணெய் உள்ளிட்ட மென்மையான தாவர எண்ணெய்களின் இறக்குமதி 77.03 லட்சம் டன்னிலிருந்து 78.12 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் சமையல் எண்ணெய் இறக்குமதி, முந்தைய ஆகஸ்ட் மாதத்தின் 15.72 லட்சம் டன்னிலிருந்து 15.44 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 22,700 டன்னிலிருந்து 2,905 டன்னாகவும், கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1.56 லட்சம் டன்னிலிருந்து 1.05 லட்சம் டன்னாகவும் சரிந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
அதிகரிக்கும் இறக்குமதிச் செலவு
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன. கடந்த செப்டம்பரில், ஒரு டன் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெயின் சராசரி விலை 1,228 டாலராகவும், கச்சா பாமாயில் விலை 1,285 டாலராகவும் இருந்தது. இவற்றின் ஓராண்டுக்கு முந்தைய விலைகளோடு ஒப்பிடுகையில், 9.7 சதவீதம் மற்றும் 10.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
கச்சா சோயாபீன் எண்ணெய் விலை 11.2 சதவீதம் உயர்ந்து டன்னுக்கு 1,314 டாலராகவும், கச்சா சூரியகாந்தி எண்ணெய் விலை 10.8 சதவீதம் அதிகரித்து 1,432 டாலராகவும் உயர்ந்துள்ளது.
மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் சராசரி மதிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.88.32 ஆக இருந்த நிலையில், இந்தாண்டு செப்டம்பரில் ரூ.95.51 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 8.10 சதவீத ரூபாய் மதிப்பிழப்பைக் குறிக்கிறது. இதனால், ஒரே அளவு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கும் கூடுதல் ரூபாய் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டேபிள்
டாப் 4 இறக்குமதி நாடுகள்
நாடு இறக்குமதி அளவு (லட்சம் டன்னில்)
1. அர்ஜென்டினா - 34.43
2. மலேஷியா - 29.76
3. இந்தோனேஷியா - 29.05
4. ரஷ்யா - 12.89